breakfastlunchdinner

Tuesday, July 29, 2008

கமகம கத்தரிக்காய்


தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...

கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 6
கொத்துமல்லி தழை- 1 கொத்து
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு

தாளிதம்:
எண்ணெய், கடுகு, வற்றல்

1.கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அல்லது நீர் சேர்க்காமல் எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

2. வேகவைத்த கத்தரிக்காய் ஆறியபின் பச்சைமிளகாய், புளி, உப்பு, பெருங்காயம், கொத்துமல்லி இலையுடன் சிறிதளவு நீர்விட்டு மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

3. அரைத்த விழுதை தாளிதம் செய்க.

சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சுவையான தொட்டுகையாக கத்தரிக்காய் சட்னி தயார்.

மசாலா கத்தரிக்காய்

கத்தரிக்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறு எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
எண்ணெய்
உப்பு


தாளிதம்:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு

கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும்

புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிதம் செய்து புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.

வாணலி அல்லது பிரைபேனில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் அனைத்துவகை சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா கத்தரிக்காய் தயார்.

கத்தரிக்காய் கொத்சு

கத்தரிக்காய் - 4
சின்ன வெங்காயம் - 1 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
வற்றல் மிளகாய் - 6
மல்லி - 3 கரண்டி
கடலைப் பருப்பு - 3 கரண்டி
நல்லெண்ணெய் - 100 மிலிகிராம்
உப்பு

வற்றல் மிளகாய்,மல்லி, கடலைப் பருப்பை வறுத்து மிக்சி அல்லது உரலில் பொடித்துக் கொள்ளவும்.

புளியை சிறிது தண்ணீரில்கரைத்து புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளவும்.

சிறிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், தோல் நீக்கிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதில் புளித் தண்ணீரை விட்டு வேகவைக்கவும். பொடித்து வைத்த மசாலாவை அதில் கொட்டி கிளறவும். அரை கப் நல்லெண்ணெயை அதில் ஊற்றி மூடி வைக்கவும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகச்சிறந்த தொட்டுகை.

கத்தரிக்காய் தொக்கு

கத்தரிக்காய் - 4
பெரியவெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
கெட்டியான புளிக்கரைசல் - அரை கப்
பூண்டு - 4 பல்
பெருங்காயப்பொடி - கால் கரண்டி
நல்லெண்ணெய் - 100 மில்லி
மஞ்சள்தூள் - அரை கரண்டி
மிளமாய்த்தூள் - 1 கரண்டி
உப்பு

தாளிதம்:
வற்றல்மிளகாய், கடுகு, கறிவேப்பிலை

கத்தரிக்காயை குக்கர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீராவியில் வேக வைக்க வேண்டும். வெந்து ஆறியபின் தோல் நீக்கி மத்தினால் கடைந்து, அல்லது கையால் பிசைந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு,பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிதம் செய்தபின் நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின் புளிக் கரைசலையும் மசித்து வைத்த கத்தரிக்காயையும் சேர்த்து கிளறவும்.

வெஜிடபிள் பிரியாணி, அனைத்து வகை சாதங்கள், தனிச்சோறு உட்பட அனைத்துக்கும் ஏற்ற தொட்டுகை இது.

அவல் ரெசிப்பி.




கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.
கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,
இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.

நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்
கூட சாப்பிடலாம்.

எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்
தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.

அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களை
உங்களுக்கு சொல்ல வந்தேன்.

அவலை ஹிந்தியில் போஹான்னு சொல்வாங்க.
உருளைக்கிழங்கு போஹா, மசலா போஹா,
சிம்பிள் போஹா இதுதான் நாம் பார்க்கப்போகும்
ரெசிப்பிக்கள்.

முதலில் படாடா போஹா(உருளைக்கிழங்கு அவல்)
தேவையான சாமான்கள்:

கெட்டி அவலோ, சன்ன அவலோ எது கிடைக்குதோ
அது - 2 கப்,

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - நீளவாக்கில் கீறியது - 2

கொத்தமல்லி தழை கொஞ்சம்,

கறிவேப்பிலை - கொஞ்சம்,

கடுகு, சீரகம் - 1/2 ஸ்பூன்,

மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப,

தாளிக்க - 1ஸ்பூன் எண்ணைய்.

எலுமிச்சை ரசம் - 1 ஸ்பூன்

செய்முறை:
கெட்டி அவலாக இருந்தால் கழுவி ஒரு நிமிடம்
வைக்கவும். (சன்ன அவலாக இருந்தால்
1 ஸ்பூன் நீரூற்றி பிசறிக்கொள்ளவும்)

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
விட்டு முதலி இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை,
வதக்கி அதன் பிறகு கடுகு, சீரகம் தாளித்து
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், வேகவைத்துள்ள
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு போட்டு
வதக்கவும்.

பிறகு கழுவி வைத்திருக்கும் அவலையும் சேர்த்து
நன்கு கலக்கவும்.

இறக்கிவைத்து எலுமிச்சை ரசம் சேர்த்து
கலக்கி மேலே கொத்தமல்லி தூவினால்
ஸ்ஸ்ஸ்ஸ்... போஹா ரெடி.

ப்ரேக் பாஸ்ட், டின்னர் எதுக்கும் பொருந்தும்.

தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி போதும்.



மசாலா போஹா:

தேவையான சாமன்களில் பச்சை மிளகாய்,இஞ்சிக்கு பதில்
1 ஸ்பூன் கரம் மசாலா.

செய்முறை அதேதான்.

சிம்பிள் போஹா:

அவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பொட்டுக்கடலை (அதாங்க ஒட்சக் கடலை)
தேங்காய்த் துருவல் 1 ஸ்பூன், உப்பு.

பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய்
மூன்றையும் மிக்சியில் சற்று கரகரப்பாக
பொடித்துக்கொள்ளவும். ( நோ வாட்டர். ஒன்லி
பவுடர் :) )

வாணலியில் எண்ணைய் விட்டு, கடுகு தாளித்து
கறிவேப்பிலை சேர்த்து கழுவி வைத்திருக்கும்
அவலையும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.

செய்து வைத்திருக்கும் பொடியை மேலே
தூவி கொஞ்சம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்.
விரும்புகிறவர்கள் கொஞ்சம் தயிர் சேத்து
அப்படியே சாப்பிடலாம்.

(பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள் இந்த
போஹா வகைகளை.)

இன்னுமொரு ரெசிப்பிக்கு இங்கே..

Friday, July 25, 2008

உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.



வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான்
சொல்லத் தேவையில்லை.

மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.


முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது
சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.

சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்
வாசனை ஊரைத் தூக்கும்.
(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்
பலர் விரும்ப மாட்டார்கள்.)

சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில பார்க்கலாம்:

ஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.


இது ரொம்ப சிம்பிள் முறை:


தேவையான சாமான்கள்:

உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்
கொள்ளவும்)

கசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.
(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்தி
கிடைக்கும்)

உப்பு, மஞ்சள் தூள், காரத்தூள் அல்லது கரம் மசாலா
தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பை பற்றவைத்து வாண்லியில் 1 ஸ்பூன்
எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு
உப்பு, மஞ்சள், காரம் சேர்த்து கிளறவும்.

கொஞ்சம் வதங்கியதும் இரக்கி வைத்து
கசூரி மேத்தி சேர்த்து வாணலி சூட்டிலேயே
பிரட்டவும்.

ஆலூ மேத்தி ரெடி.

விரும்பினால் தாளித்தபின் 2 தக்காளி
வெட்டி சேர்க்கலாம்.





மேத்தி பராத்தா:
நாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்
பிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்
கொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.

முக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்து
பிசைந்து இரு புறமும் எண்ணைய் விட்டு
சுட்டு எடுத்தால் மேத்தி பராத்தா ரெடி.

இதிலேயே தண்ணீருக்கு பதில் புளிக்காத
தயிர் சேர்த்து பிசைந்தால் மேதி தேப்லா.

( 4 நாள் வரை கெடாது)





வெந்தயக்கீரை சாம்பார்:

செய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய
என்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.

குழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.

சரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே!


குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1 கரண்டி தண்ணீர்
விட்டு அது கொதித்ததும் சுத்தம் செய்து வெட்டி
வைத்துள்ள வெந்தயக்கீரையை போடவும்.

கீரை முக்கால் பாகம் வெந்ததும் புளிக்கரைசல்
ஊற்றி கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி
சேர்த்து கொதிக்க விடவும்.

பொடி வாசனை போனதும் வேக வைத்துள்ள
பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

நல்லெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்போடு,
கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் கீறி
தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி
பரிமாறவும்.




நம் உடல் சூட்டை தடுக்கும் வெந்தயம்.

வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.

Tuesday, July 15, 2008

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்



பூண்டு மிக நல்லது. அரு மருந்து.

நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு
வகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்
சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடை
போதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரி
வீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.

விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பூச்சிக்கடி போன்ற எந்த விஷக்கடிக்கும் முதலில்
மிளகைத்தான் திங்கக் கொடுப்பார்கள்.

நாம் முதலில் பார்க்கப்போவது பூண்டு,மிளகு ரசம்.

செய்வது எளிது.

தேவையான சாமான்கள்:

4 பல் பூண்டு, தக்காளி 2, மிளகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/4 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன்,கடுகு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டு பல், மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில்
போட்டு பொடிக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து
சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
1 ஸ்பூன் சேர்த்து சூடானதும், கடுகுதாளித்து,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்
அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டை
சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை
சேர்த்தால் ரசம் ரெடி.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.



பூண்டு, மிளகுக் குழம்பு.




தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தக்காளி 1/4 கிலோ.
தேங்காய் துருவல் அல்லது கொப்பரைத்தூள் 1 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,
தனியாத்தூள் 1 ஸ்பூன்
ந.எ - 1 ஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டை உரித்து கொள்ளவும்.

சின்ன வெங்கயாத்தையும் நன்கு உரித்துக்கொள்ளவும்,

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து
அதில் மிளகு சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பிரட்டி
அடுப்பை அனைக்கும் முன் தேங்காய்த்துருவல்
சேர்த்து ஆற விட்டு மைய பேஸ்டாக
அரைத்துக்கொள்ளவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

குக்கரில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு, கறிவேப்பிலை தாளித்து
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்துவதக்கி,
அரைத்துவைத்துள்ள பேஸ்டையும் போட்டு,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 1 கிளாஸ்
தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வெயிட் போடவும்.

3 விசிலுக்கு பிறகு இறக்கி ஆற வைத்து
திறந்தால் கம கமக்கும் பூண்டு, மிளகுக்குழம்பு ரெடி.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines