breakfastlunchdinner

Tuesday, January 15, 2008

சக்கரைப்பொங்கலும், வெண் பொங்கலும்.

முதல்லே ஒரு சந்தேகம் வந்து எட்டிப்பாக்குது. சக்கரைக்கு எதிர்ப்பதம்ன்னு சொன்னா உப்புதானே? இல்லை என்று சொல்பவர்கள் கவிஞர் எழுதுனதைக் கவனிக்கவும்.

"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"

வெண் பொங்கல்னு நிறத்தை வச்சுச் சொல்லும்போது,மற்றதை பிரவுண் பொங்கல்னு ஏன் சொல்லலை?

இனிப்புப் பொங்கலும் உப்புப் பொங்கலும் சொன்னால் ஆகாதா?

ஏன், எப்படின்னு உக்கார்ந்து யோசிக்கவும். அடுத்த பொங்கலுக்கு இன்னும் ஒரு வருசம் இடைவெளி இருக்கு.


சக்கரை என்ற இனிப்புப்பொங்கல் : (துளசியின் இஷ்டைலு)

அதுக்கு முன்னால் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். ( டிஸ்கி என்பது தமிழ்ச்சொல். மேல்விவரம் கொத்ஸ் தருவார்)

ஹெல்த் நட்ஸ்கள் இந்தப் பக்கம் வரவேண்டாம்.


தேவையான பொருட்கள்:

அரிசி: 1 கப்

கடலைப்பருப்பு: கால் கப்

பாசிப் பருப்பு : கால் கப்

பால்: ஒன்னரைக் கப்

முந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க?)

உலர்ந்த திராட்சை( சுல்த்தானா): 2 மேசைக் கரண்டி

நெய்: அரைக் கப்

கோல்டன் சிரப்: 1 கப் ( வெல்லப்பாகுதான். டின்லே வருது)

தேங்காய் துருவியது: அரைக் கப்.( நான், டெஸிகேட்டட் தேங்காய்(தான்) போடுவேன்)

ஜாதிக்காய் : பொடிச்சது 1 சிட்டிகை

ஏலக்காய்: 4 ( உரித்தோ உரிக்காமலோ ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளணும்)

கிராம்பு : 5

பட்டை: ஒரு துண்டு( ரெண்டு இஞ்சு நீளத்தில்)

பச்சைக் கற்பூரம்: கால் சிட்டிகை

செய்முறை:

வெறும் வாணலியில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை கருக்காமல் வறுத்துக்கொள்ளணும். அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு அதே வாணலியில் பாசிப்பருப்பையும் இதே போல மணம் வரும்வரை வறுத்து எடுக்கணும்.

அரிசி, க & பா. பருப்புகளைச் சேர்த்து நன்றாக மூன்று முறை களைந்து எடுத்து( இந்தியர்களுக்கு அடையாளமாம் மூணு முறை கழுவறது)ஒரு குக்கர் பாத்திரத்தில் போட்டுப் பாலும், ரெண்டு கப் தண்ணீரும் சேர்த்து மூணு விசில் வரை அடுப்பில் வச்சு எடுத்துக்கணும்.

கொஞ்சம் பெரிய வாணலியை அடுப்பில் வைத்துக் கொஞ்சம் நெய் ஊற்றி மு. பருப்பு & திராட்சையைப் பொரிச்சு எடுத்துத் தனியா வச்சுக்கணும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துப் பட்டை, கிராம்புகளை லேசாப் பொரிச்சுட்டு, ஜாதிக்காய் தூளைத் தூவணும்.அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கணும்( இந்த சமயங்களில் அடுப்பு சிம்லே இருக்கணும். தீவட்டியா தீவச்சுக் கருக்கிடாதீங்கப்பு) அடுத்து, வெந்த அரிசி பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கிட்டே அந்த கோல்டன் சிரப்பை ஊத்துங்க.

மீதி இருக்கும் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறனும். நல்லா எல்லாம் ஒண்ணோடொண்ணு சேர்ந்து நிறம் எல்லாம் ஒண்ணுபோல இளம் மஞ்சள்/பிரவுண் ஆனதும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து இளக்கிட்டு, முந்திரி & சுல்த்தானா வையும் சேர்த்துக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.



இப்ப வெண் பொங்கலைப் பார்க்கலாம்.

அரிசி : 1 கப்
பாசிப் பருப்பு: காலே அரைக்கால் கப்( 1/3 கப்ன்னு ஒரு அளவுக்கிண்ணம் கிடைக்குது!)

நெய்: 1/3 கப்

உப்பு: ஒரு தேக்கரண்டி

மிளகு: ஒரு தேக்கரண்டி

சீரகம்: ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள்: ரெண்டு சிட்டிகை

இஞ்சி: துருவியது : ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை: ஒரு இணுக்கு

முந்திரிப்பருப்பு: 20

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை மணம் வர வறுத்துக்கணும். அரிசி பருப்பைச் சேர்த்துக் கழுவிக்களைந்து(3) நாலரைக் கப் தண்ணீர் சேர்த்து அதே குக்கர் & அதே 3 விஸில். ஆச்சா?

பெரிய வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் பொன்நிறமாக வறுத்து எடுத்துத் தனியே வச்சுக்கணும். இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து மிளகு & சீரகம் பொரிச்சுட்டு அதிலேயே பெருங்காயம், இஞ்சி & கருவேப்பிலை, உப்பு சேர்த்து நல்லா மணம்வரும்வரை வதக்கிட்டு, குக்கரில் வெந்ததைப் போட்டுக் கிளறணும். அப்பப்ப நெய். ஒரு மூணு, நாலு நிமிஷம் கிளறிட்டுக் கடைசியில் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஒரு கிளறல்.
அவ்வளவுதான். பாத்திரத்தில் எடுத்து வச்சால் ஆச்சு.


வேலையை எளிதாக்க:

ரெண்டு பொங்கலுக்கும் உள்ள பாசிப்பருப்பை ஒரேதா வறுத்துட்டுப் பாகம் பிரிக்கலாம். முந்திரியையும் வறுத்துட்டு எடுத்து வச்சுட்டு, இதுக்கும் அதுக்குமா எடுத்து வச்சுக்கலாம்.

மிளகை முழுசாப்போட்டால் பசங்க அதைத் தனியா எடுத்துக் கடாசுதுங்கன்னு கவனிச்சது முதல், மிளகு சீரகத்தை ஒண்ணுரெண்டா உடைச்சுப் போட்டுருவேன்.( இப்ப என்ன செய்வீங்க?)

இதே போலத்தான் இஞ்சியை எடுத்து வீசுதுங்கன்னு அதையும் துருவிப்போடறது.

நல்ல மணமுள்ள நெய் வேணுமுன்னா, இங்கே கிடைக்கும் வெண்ணெய்(அதாங்க சூப்பர் மார்கெட்டில் டெய்ரி செக்ஷனில் கிடைக்கும் உப்பு சேர்த்ததும் வாங்கலாம்) ஒரு அரைக்கிலோ கட்டி வாங்கி உருக்குனா ஆச்சு. கமகம....

நெய் மீந்து போனா வீட்டுக்காச்சு. பருப்பு சாதம், பொடிவகைக்குச் சேர்த்துக்கலாம். நெய்வாசம் எனக்குப் பிடிக்கும். போகவர மூடியைத் திறந்து மணம் புடிச்சுக்குவேன்:-)ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹாஆஆஆஆஆஆ

நேரம் கிடைக்கும்போது ஆக்கிப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

இனிய (மாட்டுப்) பொங்கல் வாழ்த்து(க்)கள்.
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines