breakfastlunchdinner

Saturday, March 31, 2007

இஞ்சி மொரபா

தாத்தா வீட்டுக்கு போனப்போ சும்மா இருக்க முடியாமல் கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் காலேஜ் ல ஒரு நாலு நாள் வகுப்பு எடுத்தாங்க அதுல சேர்ந்து ஜாம் ஜூஸ் செய்யக் கத்துக்கிட்டேன். ஒரு முறை எல்லாம் செய்தேன். அவ்வளவு தான். நோட்ட எங்கயோ வச்சிட்டேன் எடுத்துப்பார்த்தா இப்ப அதுல தண்ணி பட்டு நஞ்சு போய் அங்க இங்க எழுத்தெல்லாம் மறைஞ்சுட்டு இருக்கு.

இங்க எழுதன மாதிரி யும் இருக்கும் நினைவுபடுத்திக்கிட்ட மாதிரியும் இருக்கும் இல்லயா ? இதோ உங்களுக்காக இஞ்சி மரபா செய்வது எப்படி?

இஞ்சி 100 கிராம் .{ நானும் சித்தியும் உழவர் சந்தைக்கே போய் நல்ல இஞ்சியா பார்த்து வாங்கிவந்து செய்தமாக்கும் அன்னைக்கு}

சர்க்கரை 400 கிராம்

சிட்ரிக் அமிலம் {இது எவ்வளவு போடனும்ன்னு எழுதன இடம் சரியா தெரியல நியாபகமும் இல்ல பாத்து போட்டுக்குங்க ஒரு ஸ்பூனா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.}

நார் இல்லாத இஞ்சியாக எடுத்து , தோலை சீவி அதை துருவி வச்சுக்கோங்க. அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைங்க.

அப்புறமா அதை மிக்ஸ்யில் போட்டு அரைச்சுக் கோங்க.

சர்க்கரையில் சிறிதளவு தன்ணீர் ஊற்றி சிட்ரிக் அமிலம் சேர்த்து கம்பி
பதம் வரும் வரை காய்ச்சி தயாரித்து வைத்து இருக்கும் இஞ்சிக் கூழை சேர்த்து
நன்கு கிளறவும். பதமா வரும் {இந்த பதமெல்லாம் ஏற்கனவே ஸ்வீட் செய்து பார்த்து இருந்தீங்கன்னா புரிஞ்சுடும்} நெய் தடவிய தட்டில் பரப்பி கத்தியால பர்பியாக வெட்டி வைங்க.

கன்னி ராசி படத்துல கவுண்டமணி சொல்வாரே "டேய் உங்கக்காக்கு சூப் வைக்க தெரியும்ங்கறதே நீ வந்தப்பரம் தான் தெரியும் " அப்படின்னு மச்சான் பிரபு கிட்ட அது மாதிரி ...
எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு என் வீட்டுக்காரருக்கு தெரியாது. பாவம் அவங்களுக்கு இஞ்சி மரப்பான்னா ரொம்ப பிடிக்கும் . நானும் செய்யணும் ஒரு தடவை இந்த பதிவ படிச்சுட்டு .....

Wednesday, March 21, 2007

சாவியைத் தொலைத்துவிடாதீர்கள்

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .
பாட்டி வைத்தியம் என்று சொல்லி கேலி செய்யாதீர்கள்.
சுக்கு கஷாயம் , சீரக கஷாயம் போடுவதற்கு 5 நிமிடமும் குறைந்த அளவு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது . அதற்கு பதில்
150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன் ?

Monday, March 5, 2007

விதவிதமாய் வித்தியாசமாய்

கலர் கலராய் தோசை செய்து எங்களை அம்மா அசத்துவார்கள். காயைக் கண்டாலே நாங்க ஓடுவோம் . [அது தானே இப்போ கண்ணாடி B-( ] அம்மாவும் குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். விதவிதமாய் வித்தியாசமாய் தோசைகள்.
பிங்க் கலர் தோசை

பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் துருவி எடுத்துக் கொண்டு கொஞ்சம் வெங்காயம் வேண்டுமென்றால் பச்சை மிளகாயும் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அதனை தோசை மாவில் போட்டு பிங்க் கலர் தோசை செய்யலாம்.

பச்சை கலர் தோசை

முளை கட்டிய பச்சைபயிறை கொஞ்சமாக அரைத்துக் கொள்ளுங்கள் . இத்துடன் வெங்காயத்தாள் இரண்டைப் பொடியாக நறுக்கி அதனை தோசை மாவுடன் சேர்த்து கலக்கி பச்சை கலர் தோசை செய்யலாம். மாவு இல்லாமல் இதனை கெட்டியாக அடை போலவும் செய்யலாம்.

சிகப்பு கலர் தோசை

கோதுமை ரவையை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் மூன்று தக்காளியையும் அரைத்து ஊற்றி
சிகப்பு கலர் தோசை செய்யலாம்.

மஞ்சள் கலர் தோசை

கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து கரைத்து மஞ்சள் கலர் தோசை செய்யலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் என் பெண்ணுக்கு அவள் அத்தை விதவிதமான வடிவத்தில் சுட்டு தருவாள்.

இன்றைக்கு என்ன வடிவம் வேண்டும் ஆர்டர் எடுக்கிறேன் என்பாள். இவளும் ம்..லேடர் முடியுமா? என்பாள். ஓகே மேடம்.
லேடர் தோசை ஒன்னு ஆர்டர் என்பாள்., பென்சில் நோட்டோடு.
அப்புறம் ரெண்டு கோடு அருகில் வரைந்து நடுவில் இணைக்கும்
சிறு சிறு கோடுகளுடன் லேடர் அதாங்க ஏணி ரெடியாகும்.

சில நாள் சன் தோசை, மூன் தோசை, ஸ்டார் தோசை,
டார்ட்டாய்ஸ் தோசை கூட தயாராகும். எப்படியோ மாவு பணியாரமாகனும்.. குழந்தை சாப்பிடனும். அவ்வளவு தாங்க.


என்ன இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கலர் என்ன வடிவத்தில் தோசை செய்யப் போறீங்க?
யோசிக்க ஆரம்பிச்சாச்சா?
Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines