breakfastlunchdinner

Monday, February 26, 2007

இனிப்புடன் துவங்குகிறேன்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]

எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .
ஆகவே எந்த பண்டிகையானாலும் இதுவே எங்கள் வீட்டு
சிறப்பு இனிப்பு.

தேவையானவை:
கண்டென்ஸ்ட் மில்க் டின் 1,
பாதாம் 100 கிராம்,
முந்திரி 100 கிராம்,
ஜீனி 2 டம்ளர்,
நெய் அரை டம்ளர்.

செய்முறை: பாதாம் மற்றும் முந்திரியை ஊறவைத்துக் கொள்ளவும். ஊறிய பாதாமின் தோலை உரித்து எடுக்க வரவேண்டும் . தோல் உரித்த பாதாம் மற்றும் முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான இருப்பு சட்டியில் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் இந்த விழுதோடு மற்ற அனைத்தையும் ஊற்றிக் கிளறவும். தீயை கொஞ்சம் நேரத்திற்கு பிறகு சுருக்கியே வைப்பது நல்லது அடிபிடிக்கும் வாய்ப்புள்ளது. கைவிடாமல் கிளற வேண்டி இருக்கும். துணைக்கு யாராயாவது வேண்டுமானால் கூட்டிக்கொள்ளவும்.


பாத்திரத்தில் ரொம்பவும் ஒட்டுவது போல் தோன்றினால்
இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த கண் அளவு காதளவு சொல்லும் பெரியவர்கள் சரியான படி அளவு சொல்லுவதில்லை. நாங்கள் கண்ணளவில் போடுவோம் அளவெல்லாம் கேட்டால் எப்படி என்பார்கள் . அவ்வப்போது இப்படி கைக்கு கிடைத்ததை சேர்த்து மாவை பணியாரமாக்குவது வழக்கம்.


புதிதாக செய்பவர்கள் கவனமாக இருக்கவும். கொப்பளித்து வரும் கையில் தெளிக்க வாய்ப்புண்டு. நீளமான கரண்டி கொண்டு கிளறவும். கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தீர்கள் என்றால் இப்படி பட்ட நேரத்தில் உடைத்து அதன் உள்ளிருக்கும் பசையைத் தடவினால் கொப்பளிக்காது . எரியாது . பின்னாளில் தடமும் தெரியாது .


முன்பே சொல்ல விட்டுப் போய்விட்டது கிளறத் தொடங்கும் முன்னேயே ஒரு தட்டில் நெய்தடவி வைத்திருக்கவும் கிளறியதைக் கொட்ட தேவைப்படும் . ஒரு சொட்டு தட்டில் ஊற்றிப்பார்த்தால்
உடனே கெட்டியாக மாறும் . கொதித்து வெள்ளை வெள்ளை முட்டைகளாக வரத்தொடங்கும் . பாத்திரத்தில் ஒட்டாமல் வர தொடங்கும். இது சிலமுறை செய்து பார்த்தால் பக்குவம் தெரிந்துவிடும். [அல்வா வேண்டும் என்றால் சிறிது முன்னேயே இறக்கவும்.]


நெய் தடவிய தட்டில் கொட்டவும் . சிறிதே ஆறிய வுடன்
கட்டங்களாக வெட்டவும். இனிப்பு தயார். அலங்காரத்தில் விருப்பமுள்ளவர்கள் ஆறும் முன் பாதாம் முந்திரியை
பதிக்கலாம். ஆறிய வுடன் மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அல்வா பதமாக இருந்தால் கவலை வேண்டாம் வீட்டில் உள்ளவருக்கு ஸ்பூனால் கொடுங்கள். அக்கம்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள உருளையாக செய்து பட்டர் பேப்பரில் சுருட்டவும் . இல்லை பர்பி தான் வேணும் என்றால் அல்வாவை மீண்டும் அடுப்பில் வைத்து கிளறிப் பார்க்கவும் . சிறிதே கெட்டி பதம் குறைகிறதென்றால் ஃப்ரீசரில் வைத்துப் பார்க்கவும் . நன்றாக வந்தால் "சாப்பிட வாங்க" பகுதிக்கு பார்சல் அனுப்பிவைக்கவும்.

7 comments:

Anonymous said...

மிக அழகாக தொடங்கியிருக்கிறீர்கள். குறிப்பும் படங்களும் இடையில் வந்த குறிப்பும் எல்லாம் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சிந்தாநதி.

துளசி கோபால் said...

இனிப்புக்கு நன்றி.

இதை மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் தெரியுமா? :-)

து. சாரங்கன் / Saru said...

//கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தீர்கள் என்றால் இப்படி பட்ட நேரத்தில் உடைத்து அதன் உள்ளிருக்கும் பசையைத் தடவினால் கொப்பளிக்காது .//

கற்றாழைப் பசையை எதில் தடவுவது? கையிலா, பாத்திரத்திலா, கரண்டியிலா? கையிலென்று நினைக்கிறேன். ஆனாலும் உறுதிப்படுத்துங்கள், ஏனா நாமெல்லாம் ரஜனி படத்தில் வந்தமாதிரி சமையல் குறிப்பில் சொன்னதையெல்லாம் அப்படியே செய்யிற கேஸ் ;-)

இதை செய்து பார்த்த பிறகு, அல்வாவா? பர்பியான்னு சொல்றேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\துளசி கோபால் said...
இனிப்புக்கு நன்றி.

இதை மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் தெரியுமா? :-) //

இல்லை துளசி நான் முயற்சி செய்யவில்லை.சாதா அடுப்பைப்போல மைக்ரோவேவ் இன்னும் பழகவில்லை பயமாக இருக்கிறது.

\\து. சாரங்கன் / Saru said... கற்றாழைப் பசையை எதில் தடவுவது? கையிலா, பாத்திரத்திலா, கரண்டியிலா?//
கையில் தெளித்துவிட வாய்ப்புண்டு என்று எழுதிவிட்டதால் இந்த காயம் பட்ட அனுபவஸ்தர்களுக்கு புரியும் என்று விட்டு விட்டேன்.

lucky said...

your receipes are very interesting. i welcome you to my blog to view more different receipes

cheena (சீனா) said...

அருமையான குறிப்புகள் - எளைமையான் முறை - சொல்லிக் கொடுக்கும் விதம் நன்றாக இருக்கிறது. நடுவில் கற்றாழை பயன் வேறு - வாழ்த்துகள் -

Google
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines