INGREDIENTS பட்டியல் |
வட இந்தியர்கள் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நிறைய சப்ஜி [Side Dish] செய்வார்கள். அதில் முக்கியமான சப்ஜிகளில் இந்த சன்னா மசாலாவும் ஒன்று. இதற்கு காபூலி [Kabooli] சன்னா, பெரியதாக இருக்கும் வெள்ளைக் கொண்டக் கடலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பட்ட சன்னா மசாலா செய்முறையை தெரிந்து கொள்வோமா?
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டக் கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ½ டீஸ்பூன்
சோலே மசாலா – ½ டீஸ்பூன் (இப்போதெல்லாம் கடைகளிலேயே கிடைக்கிறது.)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
எலுமிச்சைசாறு – புளிப்பு சுவை பிடித்தால், கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் இரண்டு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். நான் பெரும்பாலும் சேர்ப்பது கிடையாது.
செய்முறை:
ஒரு கப் கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் மேலே கொடுக்கப் பட்ட பொருட்களில் உள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன் பிடித்தால் பூண்டு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம். அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பின்பு அதில் அரைத்து எடுத்த வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, சோலே மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்படி வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் இந்த க்ரேவி நம் மேல் தெளிக்காமலும், கிச்சன் டைல்ஸ் மேலும் தெளிக்காமலும் இருக்கும்.
க்ரேவி நன்றாக வதங்கியதும் ஊற வைத்திருந்த கொண்டக் கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மூழ்கும் வரை) குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் (மிகவும் குறைந்த தணலில்) 25 நிமிடங்கள் வைத்து அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரங்கழித்து குக்கரைத் திறந்து விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும். சுவையான சன்னா மசாலா தயார்.
நான் முதலில் கொண்டக் கடலையை தனியாக வேக வைத்து க்ரேவி செய்து அதில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் தோழி ஷோபனாதான் க்ரேவியிலேயே கொண்டக்கடலையை வேக வைக்கும் முறையை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. இப்பொழுதெல்லாம் என்னவருக்கு நான் கொடுக்கும் மதிய உணவில் சோலே கொடுத்தால் அதை சாப்பிடும் அவரது அலுவலக நண்பர்கள் பஞ்சாபிகள் செய்தது போலவே இருக்கிறது என்கிறார்களாம். நீங்களும் செய்து உங்களவரை அசத்துங்களேன்!!!. சாப்பிட்டு உங்களவர் “(B)பல்லே (B)பல்லே” என ஒரு பஞ்சாபி பாங்க்ரா நடனமே ஆடுவார்!!!
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.
ஆதி
3 comments:
nalla suvaiyo suvai parattugal nandri
naan idhai netru seydhen (ungal recipe paarthu thaan)
it was very nice and tasty.thanks
வாங்க போளூர் தயாநிதி,
நன்றிங்க.
வாங்க ANGELIN,
நன்றிங்க.
Post a Comment