INGREDIENTS பட்டியல் |
என்னுடைய கோவை2தில்லி வலைப்பூவில் எழுதியதன் மீள்பதிவு இது.
சென்ற பதிவான சப்பாத்தி சுட்டுச் சுட்டு போடட்டுமா-வில் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள தேவையான எனக்குத் தெரிந்த வடஇந்திய சப்ஜி வகைகளின் செய்முறையை எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். இந்த இடுகையில் பாலக் பனீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஹிந்தியில் ”பாலக்” என்றால் பசலைக் கீரை. பசலைக் கீரையில் விட்டமின் A, K, C, B2, B6 போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதில் போடும் மற்ற பொருளான பனீரிலும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.
ஆங்கிலத்தில் பாலக் கீரையை Spinach என்று சொல்வார்கள். “THE POPEYE SHOW” பார்த்து ரசிக்காத யாரும் உண்டோ. அதில் பாலக் சாப்பிட்ட உடன் அவருக்கு அப்படி ஒரு சக்தி வரும் இல்லையா, அது போல இந்த பாலக் பனீர் சாப்பிடுங்க, நல்ல சக்தி கிடைக்கும்!
தேவையான பொருட்கள்:
பாலக் [பசலைக்கீரை] : 1 கட்டு.
வெங்காயம் : 2
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 1 அல்லது 2
இஞ்சி : 1 துண்டு
மிளகாய்த் தூள் : அரை டீ ஸ்பூன்
மல்லித் தூள் : 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா : ½ டீ ஸ்பூன்
சீரகம் : ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி : ¼ டீ ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணை : சிறிதளவு [வதக்க]
பனீர் : 200 கிராம்
செய்முறை:
”பாலக்” கீரைக் கட்டினைப் பிரித்து, இலைகளைத் தனியாக ஆய்ந்து, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும். குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்து எடுத்த விழுதினைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதக்கிய பின் அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
வெந்து இருக்கும் பாலக் கீரையை எடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைக்கவும். அரைத்து எடுத்த பாலக் கீரை விழுதை வாணலியில் வதங்கி உள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டு இருக்கும் பாலக் கலந்த க்ரேவியில் போடவும். போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும். பனீர் போட்ட பிறகு நிறைய கொதிக்க விட்டால், பனீர் கெட்டிப்பட்டு சுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக் பனீர் ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம் .
ஆதி
4 comments:
pakirvukku nanri. vaalththukkal.
வாங்க மதுரை சரவணன்,
நன்றி.
எங்க வீட்டு வாண்டுகளுக்கு பாலக் பனீர் ஃபேவரிட் டிஷ்.குறிப்புக்கு நன்றி.
வாங்க LAKSHMI அம்மா,
நன்றிம்மா.
Post a Comment